‘விஜயகாந்த்’ பெயரால் அரசியல்… விஜய்க்கு எதிராக பிரேமலதாவின் கொந்தளிப்பு – ஒரு பார்வை

மதுரை மாநாட்டில் விஜய், விஜயகாந்தின் பெயரை எடுத்துரைத்ததிலிருந்து, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் கிளம்பத் தொடங்கின. திடீரென விஜயகாந்த் மீது விஜய் காட்டிய பாசத்திற்குப் பின்னணி என்ன? என்ற கேள்வியும் எழ ஆரம்பித்தது. இதே கேள்வியை வெளிப்படையாக பிரேமலதா முன்வைத்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் விஜய், “நான் இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்தே ஒருவரை பற்றிதான் சிந்தித்து வந்தேன். சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு மிகுந்த விருப்பம் கொண்டவர் எம்ஜிஆர். அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவரைப் போன்ற குணம் கொண்ட என் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகும் சந்தர்ப்பம் அதிகமாகக் கிடைத்தது. அவர் கூட இந்த மதுரை மண்ணின் மகன்தானே… அவரை எப்படி மறப்பது?” என்று உரையாற்றினார்.

இந்த உரையைத் தொடர்ந்து, தேமுதிக வாக்குகளை விஜய் தன் பக்கம் இழுத்துக்கொள்ள முயற்சி செய்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கெல்லாம் புள்ளி வைத்தது பிரேமலதாவின் பதில்தான். விஜயின் பேச்சைத் தாக்கிய அவர், “ஒருவரும் ஒருபோதும் விஜயகாந்தாக முடியாது. அவர் பெற்ற வாக்குகளைப் பிரிக்க விஜய் முயன்றால், மக்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். விஜய் பேசினதாலேயே தேமுதிக கூட்டணியில் சேர்ந்து விடும் என்றில்லை.

விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது அல்லது அவர் உடல்நலக்குறைவால் தவித்த வேளைகளில் விஜய் ஒருபோதும் சந்திக்கவில்லை. அப்போது அண்ணன் என தோன்றவில்லை. இன்று அவர் மறைந்த பின் புகழ்பாடுவது உலகம் முழுதும் புரிந்த உண்மைதான். சீமான் இதைத் தெளிவாகச் சொன்னார்; அவர் சொன்னது நூறு சதவீதம் உண்மைதான்” எனக் கூறியுள்ளார். இது தவெகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விஜயகாந்தின் பெயரை அரசியலுக்குப் பயன்படுத்துவது என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. விஜயின் தந்தை எஸ்ஏசி, விஜயகாந்தை வைத்து 17 திரைப்படங்களை இயக்கினார்; பெரும்பாலனவை வெற்றியும் பெற்றன. அதில் ‘செந்தூரப்பாண்டி’ மூலம் விஜய் தனது ஆரம்ப அடையாளத்தைப் பெற்றார். பின்னர், இருவரும் தனித்தனி பாதையில் சென்றுவிட்டனர்.

இப்போது கட்சி தொடங்கிய விஜய், விஜயகாந்தை புகழ்ந்து பேசுவதற்குப் பின்னால் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

  1. கூட்டணி யூகங்கள் – தவெகவால் இதுவரை எந்தக் கட்சியையும் கூட்டணியில் சேர்க்க முடியவில்லை. எனவே தேமுதிகவை தன் பக்கம் கொண்டால், அதன் மூலம் இன்னும் பல கட்சிகளை கவரலாம் என்பதே முதல் கணக்கு.
  2. வாக்கு வங்கி – விஜயகாந்துக்கு பெண்கள், இளைஞர்கள், விளிம்பு மக்கள் மத்தியில் எப்போதும் தனி ஆதரவு உண்டு. தேமுதிக குறைந்தாலும், விஜயகாந்தின் பிம்பம் இன்னும் நிலைத்திருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே விஜயின் இரண்டாவது யோசனை.
  3. மாற்றத்தின் சின்னம் – புதிய கட்சியாக இருந்து 10 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றவர் விஜயகாந்த். தமிழகத்தில் மாற்றத்தை விரும்பிய வாக்காளர்களின் விருப்பம் அப்போது அவர். இப்போது அதே மாற்றத்தை உருவாக்குவேன் என்று சொல்லும் விஜய்க்கு, அந்த வாக்குகளின் ஒரு பகுதி கிடைக்கும் என நம்புகிறார்.

மேலும், வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் விஜய்க்கு ஆதரவு உள்ளது; அங்கேயே விஜயகாந்தும் செல்வாக்கு செலுத்தியவர். எனவே, பிளக்ஸ்களில் விஜயகாந்தின் புகைப்படம் வைப்பது, மேடையில் புகழ்பாடுவது போன்றவை தவெகவுக்கே கூடுதல் முக்கியத்துவம் தரும்.

விஜயகாந்த் மறைந்த பின் பல அரசியல் தலைவர்கள் அவரின் புகைப்படங்களையும் பெயரையும் அரசியலில் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், சினிமா நட்சத்திரம் என்பதாலேயே மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை விஜய்க்கு அதிகம்.

தமிழக அரசியலில் குறுகிய காலத்தில் பெரிய தடம் பதித்தவர் விஜயகாந்த். அவர் உருவாக்கிய தேமுதிக இன்னும் உயிருடன் இயங்குகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் பெயரில் பின்னப்படும் அரசியல் யூகங்கள், விஜய்க்கு நிச்சயமாக பலன் தருமா என்பதை காலமே சொல்ல வேண்டும்.

Facebook Comments Box