மதுரை: பெண்ணின் இதயம் வரை குத்தியிருந்த ஊசியை பாதுகாப்பாக அகற்றிய மருத்துவர்கள்!

பெண்ணின் நெஞ்சில் குத்தி இதயம் வரை சென்ற ஊசியை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் பல மணி நேரம் போராடி வெற்றிகரமாக அகற்றினர். மருத்துவக் குழுவினரை டீன் அருள் சுந்தரேஷ்குமார் பாராட்டினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகாவுக்குட்பட்ட மீனம்பநல்லூரைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி (30). இவர் கடந்த 18-ம் தேதி வீட்டில் உள்ள பரணியிலிருந்து பொருட்களை எடுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது தடுமாறி விழுந்ததில், தரையில் இருந்த ஊசி ஒன்று புவனேஷ்வரி நெஞ்சில் குத்தியது. வலியால் தவித்த அவர், உடனடியாக முறையான சிகிச்சை பெறாததால், 2 நாட்கள் கழித்து மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டது.

பதற்றமடைந்த உறவினர்கள், கடந்த 21-ம் தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில், நெஞ்சில் குத்திய ஊசி இதயம் வரை சென்றிருந்தது தெரியவந்தது. அபாய நிலை காரணமாக, அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றினர். இங்கு மருத்துவர்கள் எக்கோ, ஸ்கேன் பரிசோதனை செய்ததில், இதயத்தை சுற்றி நீர்க்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக இதய அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அன்று இரவே அறுவை சிகிச்சை செய்து ஊசியை வெற்றிகரமாக அகற்றி, புவனேஷ்வரியை உயிர் காப்பாற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது எந்த பக்கவிளைவும் இன்றி நல்ல உடல் நலத்துடன் இருப்பதால், ஒரிரு நாளில் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை டீன் அருள் சுந்தரேஷ்குமார் பாராட்டினார்.

Facebook Comments Box