இந்திய கடல்சார் உச்சி மாநாடு அக்.27 முதல் மும்பையில் – மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் தகவல்

இந்திய கடல்சார் உச்சி மாநாடு அக்டோபர் 27 முதல் 31 வரை மும்பையில் நடைபெற உள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, நாட்டின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் முக்கிய மேடையாக அமையும் என மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 500க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் நடைபெறவுள்ளன. இதன் மூலம் ரூ.10 லட்சம் கோடிக்கு மேற்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டின் போது வெளிநாட்டு கப்பல்களை இந்தியாவுக்குள் இயக்குவது, இந்திய கப்பல்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சுற்றுலா சொகுசுக் கப்பல்களை இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மகாராஷ்டிராவின் தஹானு அருகே ரூ.80,000 கோடி மதிப்பில் வாதவன் துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. இது 2029ல் முடிவடையும் நிலையில், இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும். அதோடு, 18 நகரங்களில் வாட்டர் மெட்ரோ திட்டமும் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த மாநாடு, உலகளாவிய மற்றும் உள்ளூர் தலைவர்களை ஒருங்கிணைத்து உரையாடல், புதுமை, கொள்கை முடிவுகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும். மேலும், மாநிலங்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களின் பங்கேற்பை ஊக்குவித்து, உள்ளூர் வணிகத்தை உலகளாவிய அளவுக்கு உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில் சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால், தூத்துக்குடி துறைமுகத் தலைவர் சுசந்த குமார், இந்திய துறைமுக சங்க நிர்வாக இயக்குநர் விகாஸ் நர்வால், காமராஜர் துறைமுக நிர்வாக இயக்குநர் ஐரின் சிந்தியா ஆகியோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box