தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் – “மிகப்பெரும் சமூக முதலீடு” : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் என்பது ஒரு அற்புதமான சமூக முதலீடு. எதிர்காலத்தில் எண்ணிக்கக்கூட முடியாத அளவுக்கு பல மடங்கு பலன்களை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கப்போகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில், உலகளவில் முன்னோடியான இந்த காலை உணவுத் திட்டத்தை, நகரப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் உரையாற்றியபோது கூறியதாவது:
“இனி தமிழ்நாட்டின் 37,416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 20,59,000 மாணவர்கள், தினமும் காலையில் சூடான, சுவையான, சத்தான உணவுகளை சாப்பிட்டு புத்துணர்ச்சியுடன் வகுப்பறைக்குள் செல்வார்கள். இது ஒரு சிறந்த சமூக முதலீடு. வருங்காலத்தில் இது பல மடங்கு நன்மைகளை வழங்கும்.”
அவர் மேலும் கூறினார்:
“இங்கே வந்து குழந்தைகள் சாப்பிடுவதைப் பார்த்தவுடன் எனக்கும் புத்துணர்ச்சி கிடைத்தது. குழந்தைகள் தினமும் பசியில்லாமல் உணவு உண்ணுகிறார்கள் என்ற செய்தி எனக்கே பெரும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று பங்கேற்றிருப்பது பெருமை. முன்னதாக அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டார். இருவருக்கும் நன்றி.”
வள்ளுவரின் வாக்கை மேற்கோள் காட்டிய அவர், பசியும் நோயும் பகையும் இல்லாததே சிறந்த நாடு என்று குறிப்பிட்டார். “கல்வி வழங்குவதோடு பசியையும் போக்க வேண்டும்” என்ற கொள்கையில் மதிய உணவுத் திட்டம் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக, திராவிட மாடல் அரசால் காலை உணவுத் திட்டம் உருவாக்கப்பட்டது.
2022 செப்டம்பர் 15 அன்று மதுரையில் துவங்கப்பட்ட இந்தத் திட்டம், முதலில் 1,545 பள்ளிகளில் 1,14,095 மாணவர்களுக்கு பயன் அளித்தது. பின்னர் 2023 ஆகஸ்ட் 25 அன்று அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும், 2024 ஜூலை 15 அன்று ஊரக அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 17 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.
இப்போது நகர்ப்புற அரசு உதவி பெறும் 2,429 பள்ளிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதால், மேலும் 3,06,000 மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். மொத்தம் 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 20,59,000 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள்.
இந்தத் திட்டத்திற்கு ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய் செலவிடப்படுகின்றது. ஆனால் இது வெறும் செலவு அல்ல; எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடாகும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.
காலை உணவுத் திட்டத்தால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், கல்வி ஆர்வம், நட்பு உணர்வு, வகுப்பறை ஈடுபாடு ஆகியவை அதிகரித்துள்ளன. குடும்பங்களின் சுமை குறைந்துள்ளது. ஹாஸ்பிட்டல் செல்லும் அளவும் குறைந்துள்ளது. மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இந்தத் திட்டம் வெற்றியடைந்துள்ளதால், பிற மாநிலங்களும், பிற நாடுகளும் இதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன. கனடா போன்ற முன்னேற்ற நாடுகளிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
அவர் முடிவில் கூறியது:
“மாணவ, மாணவிகள் அனைவரும் நன்றாக சாப்பிடுங்கள்… நன்றாக படியுங்கள்… விளையாடுங்கள்… உங்களின் வாழ்க்கை வளமாக இருக்கும். அதுவே இத்திட்டத்தின் உண்மையான வெற்றி” என்றார்.