“ஆட்சியில் பங்கு என்பது எங்களின் முக்கிய முடிவு” – கிருஷ்ணசாமி
“ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு எடுக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. ஆட்சியில் பங்கு என்பது எங்களின் முக்கிய முடிவு” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு 2026 ஜனவரி 7-ம் தேதி மதுரையில் நடைபெறும். தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதால் ஏழை குடும்பங்கள் வறுமையில் சிக்குகின்றனர். குடும்ப அமைதி பாதிக்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கிராமங்களில் வளர்ச்சி காணமுடியவில்லை. குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. விளாத்திகுளம் பகுதியில் இன்றும் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கின்றனர். இவை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். இந்த அரசு புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறது. எந்தத் திட்டமும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக தெரியவில்லை.
100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கனிம வள கொள்ளை எந்த வித கட்டுப்பாடும் இன்றும் நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகள் சேர்ந்து ஆற்று மணல், குளத்து மண்ணை எடுத்துக்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி இளைஞர் கவின் படுகொலை வழக்கில் கொலைச் செய்பவர் தாயார் கைது செய்யப்படவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கடமையை மறந்து புரோக்கர் போல் செயல்படுகிறார். பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்காமல் போராட்ட ஆற்றலை மங்கவைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டத்தில் மட்டும் மக்கள் உணர்வுகளை மங்கவைத்து வளர்ந்துவிட்டனர். வேங்கைவயல் பிரச்சனைக்கு இன்று வரை நீதிமன்ற தீர்வு கிடையவில்லை. விழுப்புரம் திரவுபதி அம்மன் கோயிலுக்கு சென்று இன்று வரை வழிபட முடியவில்லை. இந்த பிரச்சனைகளை தீர்க்க எந்த முயற்சியும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை. திருமாவளவன் பல விதங்களில் ஆதி திராவிடர், தேவேந்திரருக்கு பாதிப்பு ஏற்படுத்தி துரோகம் செய்துள்ளார்.
கூட்டணி பற்றி நாங்கள் தற்போது முடிவு செய்யவில்லை. ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு எடுப்பதே எங்கள் நிலைப்பாடு. மாநாடு நேரத்தில் கூட்டணி தொடர்பான தகவல் வெளி வரும். ஆட்சியில் பங்கு என்பது எங்களின் முக்கிய முடிவாக இருக்கும். 2026 தேர்தலில் தலைகீழாக யார் நின்றாலும் 60 சீடுகளைத் தாண்ட மாட்டார்கள். எனவே கூட்டணி ஆட்சி தான் வரும். சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு தமிழர் என்ற அடையாளம் தேவையில்லை. அவர் தேசிய கட்சியை சேர்ந்தவர். இன்றைய சமுதாயத்தில் காதல் பிரச்சனையில் பெற்றோர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.