ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின்–கூட்டுறவு பெயரை தவறாக பயன்படுத்திய பால்கோவா கடைகளுக்கு நோட்டீஸ்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின் மற்றும் கூட்டுறவு நிறுவன பெயர்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய பால்கோவா கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ் அனுப்பி, 14 நாட்களுக்குள் பெயர் பலகைகள் மற்றும் முத்திரைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் கடந்த 19 ஆம் தேதி தனியார் பால்கோவா கடைகளில் சோதனை நடத்தினர். அதில், 10-க்கும் மேற்பட்ட கடைகள் விளம்பர பலகைகள் மற்றும் பாக்கெட்டுகளில் “ஆவின்”, “கூட்டுறவு”, “அரசு முத்திரை” போன்ற பெயர்களை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
அரசு நிறுவனங்களின் பெயர்களை தவறாக பயன்படுத்துவது, உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றமாகும் என்றும் இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நடவடிக்கை என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதையடுத்து, அந்தக் கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 14 நாட்களுக்குள் அரசு நிறுவன பெயர், முத்திரைகள், சின்னங்களை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம், 2006ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தெரிவித்ததாவது:
“தனியார் பால்கோவா கடைகள், உரிமத்தில் பதிவு செய்யப்பட்ட பெயரை விடுத்து, ஆவின் மற்றும் கூட்டுறவு பெயர்களை பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதம். இதை உடனடியாக நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் பெயர் பலகை மற்றும் முத்திரைகளை அகற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.