“கல்வி உரிமைச் சட்ட விண்ணப்ப இணையதளம் ஏன் முடக்கப்பட்டது?” – தமிழக அரசிடம் ஐகோர்ட் கேள்வி

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை பெற விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முடக்கப்பட்டிருப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இச்சட்டத்தின் படி ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் விண்ணப்பிக்க வேண்டிய இணையப்பக்கம் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்க நிர்வாகி வே.ஈஸ்வரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்பு இந்த வழக்கில், மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்க வேண்டும், தமிழக அரசும் நிதி காரணம் காட்டாமல் அதை செயல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என மனுதாரர் தரப்பு அவமதிப்பு மனு தொடர்ந்தது.

இதனை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். தனியார் பள்ளிகள் இயக்குநர் தாக்கல் செய்த பதிலில், மத்திய அரசு 60% பங்கு நிதியை வழங்காததால் இடஒதுக்கீட்டை செயல்படுத்த முடியவில்லை என்று கூறினார்.

அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது” என்றார். இதனையடுத்து நீதிபதிகள், “ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலையில் இணையத்தளத்தை மூடி வைப்பது ஏன்? மாணவர்களின் நலனுக்காக உடனடியாக அந்த பக்கத்தைத் திறக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

அதற்கு அரசு தரப்பு, “மாணவர்களின் நலனில் அரசு அக்கறையுடன் செயல்படுகிறது. தமிழகத்திற்கு எந்த கவுரவப் பிரச்சினையும் இல்லை” என்று பதிலளித்தது. பின்னர் வழக்கு விசாரணை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Facebook Comments Box