திருச்சி பஞ்சப்பூரில் எனக்கு நிலம் இருந்தால் பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம் – அமைச்சர் கே.என்.நேரு
பஞ்சப்பூரில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டதற்குக் காரணம், அங்கு அமைச்சர் கே.என்.நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதுதான் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “எனக்கு அங்கு 300 ஏக்கர் நிலம் இருந்தால், அதை அரசே கையகப்படுத்திக் கொள்ளலாம். வேண்டுமென்றால் பழனிசாமியே எடுத்துக் கொள்ளட்டும்” என்று தெரிவித்தார்.
திருச்சி மேலப்புதூர் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், துறையூரில் 108 ஆம்புலன்ஸ் வந்தது நோயாளியை காப்பாற்றுவதற்காகத்தான், வேறு எந்த காரணத்திற்கும் அல்ல. ஆனால் அதிமுகவினரே ஓட்டுநரை தாக்கியதாக காவல்துறையினர் தகவல் கொடுத்ததாகக் கூறினார்.
மேலும், “எங்கள் கட்சியில் எந்த உட்கட்டுப் பிரச்சினையும் இல்லை. நான் எப்போதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணக்கமாக உள்ளேன். ஆனால் அதிமுகவில் பழனிசாமிக்கும் தங்கமணிக்கும் இடையேதான் சண்டை இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகளே வெளிப்படையாகக் கூறுகின்றனர்” என குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து அடிக்கட்டு பணிகளும் நிறைவுசெய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.