புதுச்சேரி அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் நிலுவை – திமுக கடும் எதிர்ப்பு
புதுச்சேரி அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக மாநில அமைப்பாளர் எம். சிவா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“புதுச்சேரியில் பல அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றுக்கான நிதி ஏற்கனவே வரவு–செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் இருந்தபோதும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படாதது, கல்வித் துறையின் செயல்பாடுகளில் உள்ள சீர்கேட்டையும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் வெளிப்படுத்துகிறது.
நான்கு மாத சம்பள மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டும், இன்னும் வழங்கப்படாதது புரியாத விஷயம். மேலும், கடந்த 20 ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் நிர்வாகம் கவனிக்காதது கல்வி அமைப்பின் மீது கேள்விக்குறி எழுப்புகிறது.
7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் 2017-ல் நடைமுறைக்கு வந்த நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்ட நலன்கள், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் 2023-ல் தான் வழங்கப்பட்டன. இதனால் அவர்கள் ஆறு ஆண்டுகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 5 சதவீதத்தை பள்ளி நிர்வாகமே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். அந்தச் சுமையை ஆசிரியர்களே ஏற்று விட்டு, பின் ஓய்வூதியம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாதந்தோறும் தாமதம் செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், புதுச்சேரியில் செயல்படும் 35 அரசு உதவிபெறும் பள்ளிகளை ஒருங்கிணைத்து திமுக கட்சி கடும் போராட்டம் நடத்தும்” என சிவா எச்சரித்துள்ளார்.