அமெரிக்காவின் புதிய வரி தாக்குதலை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் – சிபிஐ வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதித்து வரும் நிலையில், அதனை பிரதமர் நரேந்திர மோடி அரசியல் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

  • ட்ரம்ப் இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு, இந்தியாவைச் சேர்த்து பல நாடுகளுக்கு எதிராக “வரி உயர்வு தாக்குதல்” நடத்தி வருகிறார்.
  • ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என தொடர்ந்து அழுத்தம் கொடுத்த அமெரிக்கா, இப்போது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி, மேலும் 25% அபராதம் என மொத்தம் 50% வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
  • இந்த புதிய வரிவிதிப்பு காரணமாக இந்தியா 4,820 கோடி டாலர் மதிப்பிலான வணிக வாய்ப்புகளை இழக்கும் அபாயம் உள்ளது.
  • குறிப்பாக ஜவுளி, பின்னலாடை, தயாரிப்பு ஆடைகள், நகைகள், இறால், தோல், காலணி, விலங்கு சார்ந்த பொருட்கள், மின்சார சாதனங்கள் போன்ற துறைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

“இந்திய மின்சார கார்கள் உலகம் முழுவதும் பரவும்” என பிரதமர் கூறினாலும், அமெரிக்காவில் அது சாத்தியமில்லை என்பதை உணர வேண்டும். “அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்” என்ற வார்த்தை வெறும் பேச்சாக இருக்காமல், அதை அரசியல் உறுதியுடன் நடைமுறையில் காட்ட வேண்டும்.

தமிழகத்தின் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், விருதுநகர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களின் ஏற்றுமதி தொழில்கள் இந்த வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, ஒன்றிய அரசு உடனடியாக மாற்றுத் திட்டங்களை வகுத்து, ஏற்றுமதி தடையின்றி நடைபெறுவதற்கு வரிச் சலுகைகள் மற்றும் பிற ஊக்குவிப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்” என சிபிஐ வலியுறுத்தியுள்ளது.

Facebook Comments Box