இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை: ட்ரம்ப் வரிவிதிப்பை கண்டித்து செப். 5-ல் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க அரசின் அடாவடி வரிவிதிப்பு தாக்குதலை எதிர்த்து, செப்டம்பர் 5 அன்று தமிழகத்தின் தொழில் நகரங்களில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்எல்) ஆகிய கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பது:

“அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் யுத்தவெறி கொள்கை உலகம் அறிந்த ஒன்றாகும். டொனால்டு ட்ரம்ப், இரண்டாவது முறையாக (ஜனவரி 2025) அதிபராகப் பொறுப்பேற்ற நாள் முதலே இந்தியா மீதான விரோத மனப்போக்குடன் நடந்து வருகிறார். பல ஆண்டுகளாக அங்கே வேலை செய்து வந்த இந்தியர்களின் விசாவை ரத்து செய்து, கைகளில் சங்கிலி போட்டு நாடு கடத்திய அவமானச் செயலையும் அவர் மேற்கொண்டார்.

இந்தியாவின் எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கியதை நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் அரசு தொடர்ந்து மிரட்டியும் அழுத்தமும் தந்தது. அமெரிக்காவின் நவீன காலனி ஆதிக்கக் கொள்கைக்கு இந்தியா இணை நிற்கக்கூடாது என இடதுசாரி, ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இந்திய அரசின் மென்மையான அணுகுமுறையைச் சாதகமாக்கிக் கொண்டு, அமெரிக்க அரசு ஆகஸ்ட் 27, 2025 முதல் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படும் இந்தியப் பொருட்களுக்கான வரியை அபராதத்துடன் சேர்த்து 50 சதவீதமாக உயர்த்த உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு காரணமாக நமது நாட்டின் ஜவுளி, பின்னலாடை, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், இறால், தோல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், மின்சார எந்திர சாதனங்கள் உள்ளிட்ட உற்பத்தித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதன் விளைவாக, ஏற்றுமதியில் 66 சதவீத வீழ்ச்சி ஏற்படும் என்றும், 4,820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் 70 சதவீத உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உருவாகும். நாட்டின் சுய பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தி, நவீன காலனி ஆதிக்க வலையில் சிக்கச் செய்வதே ட்ரம்ப் அரசின் நோக்கம். இதனை எதிர்த்து, ஒன்றிய அரசு நாட்டின் இறையாண்மை, சுயசார்பு ஆகியவற்றைக் காக்கும் உறுதியுடன் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் தைரியமாக நிற்க வேண்டும்.

அதே நேரத்தில், ஏற்றுமதி தொழில்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை குறைக்கும் வகையில் ஏற்றுமதி மானியம், வரிச்சலுகை போன்ற மாற்றுத் திட்டங்களை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து, சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்) விடுதலை ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், வேலூர், மதுரை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் செப்டம்பர் 5, 2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

“இந்தியா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரை கண்டிக்கவும், நாட்டின் சுயசார்பு பொருளாதாரக் கொள்கையையும், ஏற்றுமதி தொழில்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் காக்கவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும்” என கூட்டறிக்கை வலியுறுத்துகிறது.

Facebook Comments Box