வங்கிக் கடன் மோசடி: ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 50,000 அபராதம்
போலி ஆவணங்களின் மூலம் 10 கோடியே 54 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்திற்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னையில் ஜி.வி.பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் ஜி. வெங்கடேஸ்வரன். இவர் இயக்குனர் மணி ரத்னத்தின் சகோதரர். 1988 முதல் 1992ம் ஆண்டு வரை, நுங்கம்பாக்கில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் நிறுவனம் 10 கோடியே 54 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாக புகார் வந்ததை தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஸ்வரன் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 9 பேருக்கு 1996ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. 2003ம் ஆண்டு வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்தார். வங்கி அதிகாரிகள் 3 பேர் மரணமடைந்ததால், 4 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மற்றவர்களைப் பற்றி விசாரணை நடத்திய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வடிவேலு, வங்கி கிளை மேலாளர்கள் வெங்கட்ராமன், சுவாமிநாதன், தனிநபர் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் மொத்தம் 1,10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், நீதிபதி ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்திற்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து, அபராதம் செலுத்த தவறினால், தற்போதைய பிரதிநிதி அப்துல் ஹமீது ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.