தூய்மைப் பணியாளர்களை கைது செய்ததைக் கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் நேற்று மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த 4 கவுன்சிலர்கள், “தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்” என கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர்.

அதிகாரிகள் அளித்த தகவலின்படி, கூட்டத்தில் மொத்தம் 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில முக்கியமானவை:

  • சென்னையில் தெருநாய்கள் கட்டுப்பாட்டிற்காக டிசம்பருக்குள் 15 இனக்கட்டுப்பாடு மையங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
  • மெரினா காமராஜர் சாலையில் 2.3 கி.மீ. நீளத்திற்கு சைக்கிள் பாதை அமைக்க திட்டம்.
  • அம்பத்தூர், அண்ணாநகர் பகுதிகளில் மாநகராட்சி இறைச்சிக் கூடங்கள் ரூ.5.41 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன.
  • 15 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.1.75 கோடியில் தானியங்கி குடிநீர் மையங்கள் அமைக்கப்படும்.
  • 1,747 தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
  • மெரினா லூப் சாலையில் ரூ.1.56 கோடியில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைக்க திட்டம்.

மேலும், அன்னை தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு ரூ.15,080 வாடகையில் இடம் ஒதுக்கி, ஏழை மாணவர்களுக்கு இலவச கணினி மற்றும் தையல் பயிற்சி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. திருநங்கைகள் தங்கும் இல்லமான ‘அரண்’ டி.பி. சத்திரம் பகுதியில் இயங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Facebook Comments Box