சென்னையில் விநாயகர் சதுர்த்தி விற்பனை களைகட்டியது – பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தைகளில் நேற்று விற்பனை மிகுந்த பரபரப்பாக நடைபெற்றது. விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் ஆகியவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். விடுமுறை காரணமாக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் உற்சாகமாக நடக்கிறது. இதையொட்டி கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற வணிகப் பகுதிகள் காலை முதலே பரபரப்பாக இருந்தன. இதே நேரத்தில், பொருட்கள் மற்றும் மலர்களின் விலையும் வழக்கத்தை விட உயர்ந்திருந்தது.

சாமந்தி மலர் கிலோ ரூ.220 முதல் ரூ.400 வரை, மல்லி ரூ.900 முதல் ரூ.1,300 வரை, கோழிகொண்டை பூ கிலோ ரூ.140 முதல் ரூ.180 வரை விற்றனர். அருகம்புல் கட்டு ரூ.60 முதல் ரூ.80, எருக்கம்பூ மாலை ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது.

அதேபோல் சந்தைகளில் அவல், பொறி உள்ளிட்ட பொருட்களும் பாக்கெட் போட்டு விற்பனை செய்யப்பட்டன. பழங்களின் விலையும் உயர்ந்தது; ஆப்பிள் கிலோ ரூ.250, ஆரஞ்சு கிலோ ரூ.180 விலையில் கிடைத்தன.

விநாயகர் சிலைகளும் அதிகமாக விற்பனையாகின. ரூ.100 முதல் ரூ.1,000 வரை விலை மதிப்பில் பல வண்ணங்களில் சிலைகள் குவிந்திருந்தன. குழந்தைகள் உட்பட அனைவரும் வீட்டில் பூஜைக்கு வைக்கும் வகையில் வாங்கிச் சென்றனர். எர்ணாவூர், கொடுங்கையூர் பகுதிகளில் புலித்தோல் போர்த்திய விநாயகர், சுறாமீன் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர், சிக்ஸ் பேக் விநாயகர் போன்ற முன்பதிவு செய்யப்பட்ட சிலைகள் லோடு ஆட்டோக்களில் அனுப்பப்பட்டன.

கொழுக்கட்டை, சுண்டல் செய்ய தேவையான பொருட்களை வாங்க மளிகைக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக மாலை நேரங்களில் விற்பனை உச்சத்தை எட்டியது. இதனால் முக்கிய சாலைகளிலும் புறநகர் பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் கூடுதல் பணியில் ஈடுபட்டனர்.

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் போன்ற பேருந்து நிலையங்களில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வாரத்தின் நடுப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி வந்தாலும், தொடர்ந்து சுபமுகூர்த்த தினமும் இருப்பதால் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்பதற்காக பலர் விடுப்பு எடுத்து புறப்பட்டனர்.

முன்பதிவு செய்யாதவர்கள் பேருந்துக்காக காத்திருந்து பயணித்தனர். சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் மூலம் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். வழக்கம் போல் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தடுக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்தது.

இதேபோல எழும்பூர், சென்ட்ரல் போன்ற முக்கிய ரயில் நிலையங்களிலும் மக்கள் திரண்டு காணப்பட்டனர். அங்கிருந்து இயக்கப்பட்ட ரயில்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அரசுப் பேருந்து, ரயில், ஆம்னி பேருந்து ஆகிய பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மூலம் மொத்தம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் சென்றனர். மெட்ரோ நிலையங்களிலும் கூடுதல் கூட்டம் காணப்பட்டது.

Facebook Comments Box