ஜெகதீப் தன்கர் விவகாரம்: ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும் – செல்வப்பெருந்தகை
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக் கணக்கு குழுவின் ஆய்வு பணிக்காக வந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நாளிலிருந்து மக்களின் முன்னிலையில் இல்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதை யாரும் அறியவில்லை. பாஜக தலைவர்கள் அவரை சிறைபிடித்து வைத்துள்ளனரா? மக்களிடம் செல்ல அவரை பாஜக தடுக்கிறதா? அவரை வெளியில் வரவிடாமல் தடுத்திருப்பது யார்?
பாஜக தலைவர்கள் அவரை மக்களிடம் காண்பிக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும். துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய அவருக்கு யார் அழுத்தம் கொடுத்தனர் என்பது கேள்விக்குறி. சட்டம் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றியவர் ஜெகதீப் தன்கர், ஆனால் அவருக்கே பாதுகாப்பு இல்லை.
வரவிருக்கும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில், இண்டியா கூட்டணிக்கு 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் கிடைக்கும்,” என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.