முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு: குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு விசாரணை அக்.10க்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணை, அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் அளித்த புகாரின் பேரில், 2021 நவம்பரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், அதே நாளில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி அளித்த புகாரின் பேரில், பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பெற்றதாகவும், அந்த தொகையில் ரூ.3 கோடி ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில், அவர் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜூலை 16ஆம் தேதி விசாரணை தொடங்கியது.
சமீபத்திய அமர்வில், ராஜேந்திர பாலாஜி உட்பட 8 குற்றம் சாட்டப்பட்டோர் ஆஜராகினர். இரு வழக்குகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 150 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டு, விசாரணை அக்.10க்கு மாற்றி வைக்கப்பட்டது.