அமெரிக்க வரி விதிப்பால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவி வழங்குக: அன்புமணி கோரிக்கை
அமெரிக்கா விதித்துள்ள 50% இறக்குமதி வரியின் காரணமாக தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ.5000 உதவி வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க வர்த்தகப் போரின் தாக்கத்தால் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் நூல்துறை, ஆடை உற்பத்தித் துறை, தோல்துறை, கடல் உணவு ஏற்றுமதித் துறை உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். திருப்பூரில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர், வேலூரில் 75 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு தொழில்துறைக்கு அவசர கால கடன், வட்டி தள்ளுபடி, வரிச் சலுகை உள்ளிட்ட ஊக்குவிப்பு திட்டங்களை வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களின் வாழ்க்கையை காக்க தமிழக அரசு நேரடி நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.