இலங்கை துறைமுகத்தில் உள்ள தமிழக மீனவர் படகுகள் – ஏலமிடத் திட்டம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அகற்றி, ஏலமிடும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினர் சுமார் 500 படகுகளை பறிமுதல் செய்து, 3,800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிறையில் அடைத்தனர். மத்திய, மாநில அரசின் முயற்சிகளால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், படகுகள் திருப்பி வழங்கப்படவில்லை.

2018 பிப்ரவரி மாதம் முதல், இலங்கை நீதிமன்றங்கள் தமிழக-புதுச்சேரியைச் சேர்ந்த 180 படகுகளை நாட்டுடைமையாக்கின. இவற்றில் பல படகுகள் தலைமன்னார், காங்கேசன்துறை, மயிலிட்டி துறைமுகங்களில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள 123 படகுகளில், 68 படகுகள் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில் உள்ளன.

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க செப்டம்பர் முதல் வாரம் துறைமுகத்தை பார்வையிட உள்ளதால், அங்குள்ள படகுகளை அச்சுவேலி பகுதியில் கொண்டு சென்று பகுதி பகுதியாக பிரித்து, மரக்கட்டைகள், விறகுகளாக மாற்றி ஏலமிட திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளுக்கு தலா ரூ.8 லட்சமும், நாட்டுப் படகுகளுக்கு தலா ரூ.2 லட்சமும் தமிழக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து உதவி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box