அமெரிக்க வரிவிதிப்பு – ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பரிந்துரை தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

“காலனி ஆதிக்கம் போல இன்றைய உலகிலும் கடுமையான வரிகள் புதிய ஏகாதிபத்திய கருவியாக பயன்படுத்தப்படுகின்றன. நமது எரிசக்தி தேவைகளைப் பாதுகாத்ததற்காகவே இத்தகைய மறைமுக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது வர்த்தகத்தைப் பற்றியது அல்ல; இந்தியாவின் உறுதியைக் குலைக்கும் அரசியல் நடவடிக்கை” என்று குறிப்பிட்டார்.

மேலும், திருப்பூர், சூரத், நொய்டா உள்ளிட்ட நெய்தல் தொழில், இறால் ஏற்றுமதி, ரத்தின ஆபரணத் துறையில் உள்ளவர்களுடன் தாம் இணைந்து நிற்பதாகக் கூறிய கமல்ஹாசன், அரசுகள் மேற்கொள்ள வேண்டிய மூன்று முக்கிய நடவடிக்கைகளை பட்டியலிட்டார்:

  1. அவசர உதவி – சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2 ஆண்டு கடன் தவணை அவகாசம் மற்றும் சிறப்பு அவசர காலக் கடன்.
  2. குறைந்த வட்டிக் கடன் – ஏற்றுமதியாளர்களுக்கு எளிய முறையில், குறைந்த வட்டியில் கடன் கிடைக்க ஏற்பாடு.
  3. செலவுச் சலுகை – தற்காலிக மின் கட்டணச் சலுகை, சரக்கு போக்குவரத்து ஆதரவு, செயற்கை நூல் இறக்குமதி விதிமுறைகளில் தளர்வு.

“இந்திய ஏற்றுமதியாளர்களின் வாழ்வாதாரமே ஆபத்தில் உள்ள நிலையில், முழு நாடும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது” என கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

Facebook Comments Box