தமிழக மக்களுக்கு நல்லாட்சி தரும் வரை எமக்கும், தொண்டர்களுக்கும் ஓய்வு இல்லை: இபிஎஸ்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:
“தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் வரை, என்னையும், அதிமுக தொண்டர்களையும் தூக்கம் வராது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை நான் கடந்த ஜூலை 7-ஆம் தேதி தொடங்கினேன். இதுவரை 118 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, சுமார் 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். இந்த காலத்தில் 6,728 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் நெருக்கமாக உணர்ந்தேன்.
நான் சென்ற இடங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், பெண்கள் சுய உதவிக்குழுவினர், தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்கள், ஏலகிரி மலைப் பழங்குடியினர் என பலரும் ஆர்வத்துடன் சந்தித்து தங்களது கருத்துகளை பகிர்ந்தனர். அவர்கள் அனைவரும் அதிமுக ஆட்சியில் கிடைத்த நலத்திட்டங்களை பாராட்டி, நல்லாட்சியை நினைவுகூர்ந்தனர்.
அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும், தாலிக்குத் தங்கத்துடன் சேர்த்து பட்டு வேட்டி, சேலை வழங்கப்படும். தீபாவளிக்காக மகளிர்க்கு சேலை வழங்கப்படும். வீடற்ற ஏழைகள், பழங்குடியின மக்களுக்கு நிலம் வழங்கி, தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ளேன்.
ஆனால் திமுக ஆட்சி தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லத் தவறிவிட்டது. மக்களின் வாழ்வு துயரமும் கண்ணீருமாக மாறியுள்ளது. 51 மாதங்களுக்கு மேலாக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
ஸ்டாலின் `நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை; உங்களையும் ஓய்வெடுக்க விடப்போவதில்லை’ எனக் கூறுகிறார். ஆனால் உண்மையில், 2026-க்குப் பிறகு அவர் நிரந்தர ஓய்வுக்கு செல்லப் போகிறார். குடும்ப ஆட்சியை முற்றிலும் ஒழித்து, ஜெயலலிதா முறை நல்லாட்சியை மீண்டும் கொண்டு வருவோம். மோசமான விளம்பர, போட்டோஷூட் ஆட்சியை 2026-ல் வீட்டுக்கு அனுப்புவோம்.
எமது எழுச்சிப் பயணத்துக்கு மக்கள் அளிக்கும் பெரும் ஆதரவை, அலைமோதும் கூட்டத்தை பார்த்து ஸ்டாலின் பொறுக்க முடியாமல், நான் எம்ஜிஆர், ஜெயலலிதா போல பேசுகிறேன் என குற்றம் சாட்டுகிறார். ஆனால் உண்மையில் நான் மக்களில் ஒருவன், ஒரு சாதாரண தொண்டன்.
முன்கள வீரனாக எழுச்சிப் பயணம் தொடரும். தமிழக மக்களுக்கு நல்லாட்சி தரும் வரை ஓய்வில்லை. 2026 தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்பது உறுதி. எங்கு சென்றாலும் எழுச்சியுடன் வரும் மக்களின் ஆதரவே வெற்றிக்கான சாட்சி.”