தமிழகத்தில் செப்டம்பர் 4 வரை மழை பெய்யக்கூடும்
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 30) முதல் செப்டம்பர் 4 வரை சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:
“தென்னிந்தியப் பிராந்தியங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நாளை முதல் செப்டம்பர் 4 வரை பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கலாம்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.