“புதிய வாக்காளர்கள் திமுகவை நாடி வருகிறார்கள்” – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு ஜெர்மனி பயணமாக புறப்பட்டார். துர்கா ஸ்டாலின், செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றார். இன்று இரவு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்த பின் செப்.1-ம் தேதி லண்டன் புறப்படுகிறார்.

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் நோக்கம் – தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும்தான். 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்தபின் இதுவரை ரூ.10.62 லட்சம் கோடி மதிப்பிலான 922 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, சுமார் 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் ஏற்கனவே உற்பத்தி தொடங்கிவிட்டன.

ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றபோது ரூ.18,498 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்தன. அதேபோல், இம்முறை ஜெர்மனி, இங்கிலாந்து பயணமும் முக்கிய முன்னேற்றத்தைத் தரும். தமிழ்நாட்டு மக்களின் அன்பும் வாழ்த்துகளும் எனக்கு துணை” என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஸ்டாலின்,

“என் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துள்ளன. திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்தாலோ இல்லையோ புதிய வாக்காளர்கள் தொடர்ந்து நம்மை நோக்கி வருகிறார்கள். பிஹாரில் தேர்தல் ஆணையம் செய்த மாதிரி யாரேனும் சதி செய்தாலும், அதை முறியடிக்க தமிழ்நாட்டுக்கு வல்லமை உண்டு” என்று வலியுறுத்தினார்.

Facebook Comments Box