“அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம், பாஜகவினரை தூண்டிவிட்டாலே போதும்!” – செல்லூர் ராஜு
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, “பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டியதில்லை; அவர் தனது கட்சியினரை உற்சாகப்படுத்தி தூண்டினாலே போதும், எடப்பாடி பழனிசாமி நிச்சயம் முதல்வராகி விடுவார்” எனக் கூறியுள்ளார்.
மதுரையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 1 முதல் 4 வரை நடத்தவுள்ள “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் தொடர்பான பிரச்சார வாகனத்தை மதுரை காளவாசலில் தொடங்கி வைத்த பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:
“மதுரை மண்ணுக்கு ரூ.8,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களை வழங்கியவர் பழனிசாமி. அவரை வரவேற்க மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். இதனை கண்டு, திமுக காழ்ப்புணர்ச்சியுடன் மதுரை மாநகராட்சியில் பிளக்ஸ் கட்டணம் வசூலிக்கும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளரை முதல்வர் அரியணையில் ஏற்ற உயிரை கொடுக்கத் தேவையில்லை. அவர் தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தூண்டினாலே போதும். மக்கள் ஏற்கனவே ஆட்சி மாற்றத்துக்காகக் காத்திருக்கின்றனர்.
2026 தேர்தலில் ஒருவிரல் புரட்சியைப் போல் மிகப் பெரிய புரட்சியாக அதிமுக ஆட்சி மீண்டும் மலரும். தேர்தல் எப்போது வந்தாலும், பழனிசாமிக்கு வாக்களித்து அவரை முதல்வராக்க மக்கள் காத்திருக்கின்றனர்” என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.