அமெரிக்க வரி நெருக்கடி – மத்திய அரசின் நடவடிக்கை போதாமை: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
அமெரிக்கா விதித்த 50% சுங்கவரி காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விதித்த 50% சுங்கவரி 27 ஆகஸ்ட் 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்தியாவின் முன்னணி உற்பத்தி மற்றும் மென்பொருள் மையமாக விளங்கும் தமிழ்நாடு, அமெரிக்காவையே தனது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகக் கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 31% அமெரிக்காவுக்கே சென்றுள்ளது; இந்தியா முழுவதும் அது 20% மட்டுமே. எனவே, அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழகத்திற்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்குகிறது.
இந்த சுங்கவரி உயர்வு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையானது. பல ஆர்டர்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் எங்கள் தயாரிப்புகள் உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இக்கடின சூழலில் மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானதாக இல்லை. மாநில அரசின் வரம்புகளை நாம் உணர்கிறோம். ஆகையால், மத்திய அரசு குறிப்பாக துணிநூல் துறைக்கு முன்னுரிமை கொடுத்து, ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த கொள்கையை வடிவமைக்க வேண்டும்.
Guidance Tamil Nadu-வின் மதிப்பீட்டுப்படி, 50% சுங்கவரி விதிப்பால் மாநிலத்திற்கு 3.93 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் துணிநூல், இயந்திரங்கள், நகை, வாகன உதிரிபாகங்கள் போன்ற துறைகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும். வேலை இழப்பு 13% முதல் 36% வரை உயரும் அபாயம் உள்ளது.
இந்தியாவின் துணிநூல் ஏற்றுமதியில் 28% பங்குடன் தமிழகத் துறை கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கிறது. திருப்பூரில் 65% தொழிலாளர்கள் பெண்கள். கடந்த ஆண்டு ரூ.40,000 கோடி வெளிநாட்டு செலாவணியை ஈட்டியுள்ள இந்தத் துறையில் மட்டும் 1.62 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகஸ்ட் 16 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதி, துணிநூல் துறைக்கான சிறப்பு நிவாரணத் திட்டம், GST சீர்திருத்தம், வட்டி மானியத்துடன் கூடிய அடமானமற்ற கடன்கள், RoDTEP சலுகை உயர்வு, FTAs விரைவுபடுத்தல் போன்ற பரிந்துரைகளை முன்வைத்தோம். பருத்தி இறக்குமதியில் சுங்கவரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். ஆனால் இது குறுகிய கால நிவாரணமே.
தமிழ்நாடு தன் பங்கிற்கு புதிய சாயப்படுத்தல் அலகுகள், ZLD அடிப்படையிலான சுத்திகரிப்பு நிலையங்கள், தொழில்நுட்பத் துணிநூல் மிஷன், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றை முன்னெடுத்துள்ளது. இருப்பினும், சர்வதேச பேச்சுவார்த்தைகள், சுங்கவரி கொள்கைகள், மாபெரும் பொருளாதார ஆதரவு போன்றவை ஒன்றிய அரசின் பொறுப்பில் தான் உள்ளது.
நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்ற முடியும். பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கும் புதிய கொள்கையை மத்திய அரசு விரைந்து உருவாக்க வேண்டும். இல்லையெனில், கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் சிக்கி விடும்” என முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.