ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு – இன்று முதலீட்டாளர்கள், தொழில் தலைவர்களுடன் சந்திப்பு

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அங்கு உள்ள தமிழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இன்று டசல்டார்ஃபில் நடைபெறும் உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு, தொழில் துறை முன்னேற்றங்களைப் பற்றியும், முதலீட்டுத் திட்டங்களைப் பற்றியும் முதல்வர் உலகளாவிய தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஐரோப்பிய நாடுகளில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 30ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரை வந்தடைந்தார். அங்கு வட ரைன் – வெஸ்ட்பாலியா மாகாணத்தின் பிரதிநிதி அன்யா டி வூஸ்ட், பெர்லின் இந்திய தூதரகத்தின் அபிஷேக் துபே, ஃபிராங்க்பர்ட்டில் உள்ள துணை தூதரக அதிகாரி விபா காந்த் ஷர்மா ஆகியோர் மற்றும் பெருமளவிலான தமிழர்கள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பின்னர் அங்குள்ள அயலக தமிழர்கள் ஏற்பாடு செய்த கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர், ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

இன்று நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டுக்கு தலைமை தாங்கும் ஸ்டாலின், முக்கிய முதலீட்டாளர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தமிழகத்தில் தொழில்களை விரிவுபடுத்த அழைக்கிறார்.

மேலும், தனது பயணத்தின் போது ஜெர்மனியின் வட ரைன் – வெஸ்ட்பாலியா மாகாண முதல்வர் ஹென்ட்ரிக் வூஸ்ட்டையும் சந்திக்க உள்ளார். ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்த பின், அவர் இங்கிலாந்துக்கு சென்று அங்கும் முதலீட்டாளர்கள் மற்றும் தமிழர்களுடன் சந்திக்கவுள்ளார்.

Facebook Comments Box