முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகள் ஒப்பந்தமாக வழங்கப்பட்ட விதத்தில் சுமார் 98 கோடி 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கை ரத்து செய்ய தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவில்லை எனக் கூறி, புகார் அளித்த அறப்போர் இயக்கம் சார்பில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்தி மதி மீது வழக்கு தொடர தமிழக அரசு ஆகஸ்ட் 30 அன்று அரசாணை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இன்னும் இரு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி அவசியம் என லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான ராஜ் திலக் விளக்கம் அளித்தார். இதையடுத்து, அரசியல்வாதிகளைச் சேர்ந்த வழக்குகளில் மட்டும் ஏன் தாமதம் ஏற்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு நிதி தொடர்பான வழக்குகளில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு வழக்குகளில் காவல் துறையினர் பொறுப்புடன் செயல்பட்டு, நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், விசாரணை செப்டம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.