தமிழகத்தில் ஜெர்மனிய நிறுவனங்களின் ரூ.3,201 கோடி முதலீடு – 6,250 பேருக்கு வேலை வாய்ப்பு; முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீடு செய்யவும், சுமார் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
தமிழகத்தில் முதலீடுகளை அதிகரித்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு சார்பாக விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரில் நேற்று நார்-பிரெம்ஸ், நோர்டெக்ஸ் குழுமம், இபிஎம்-பேப்ஸ்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
முனிச் நகரை தலைமையகமாகக் கொண்ட நார்-பிரெம்ஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ரூ.2,000 கோடி முதலீட்டில் ரயில்வே கதவுகள், பிரேக்கிங் அமைப்புகளுக்கான மேம்பட்ட உற்பத்தி நிலையம் அமைத்து, 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ஹேம்பர்க் நகரில் தலைமையகம் கொண்ட நோர்டெக்ஸ் குழுமம் உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தங்களது தொழிற்சாலையை விரிவுபடுத்த ரூ.1,000 கோடி முதலீடு செய்து 2,500 பேருக்கு வேலை வழங்கும்.
மல்ஃபிங்கன் நகரைத் தலைமையகமாகக் கொண்ட இபிஎம்-பேப்ஸ்ட் நிறுவனம் மின்மோட்டார் மற்றும் மின்விசிறி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் சென்னை உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்தவும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.201 கோடி முதலீட்டில் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், 250 பேருக்கு வேலை வழங்கவும் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதே நேரத்தில், பிஎம்டபிள்யூ குழுமத்தின் எதிர்கால மின்சார வாகன முதலீட்டு வாய்ப்புகள் குறித்து, அந்த நிறுவனத்தின் உலகளாவிய அரசு விவகாரத் தலைவர் தாமஸ் பெக்கர் மற்றும் இந்திய பிரிவு அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜெர்மனி பயணத்தை முடித்த முதல்வர் ஸ்டாலின் நேற்று இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு அயலகத் தமிழர் அமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய அழைக்கிறார்.
இந்நிலையில், கொலோன் நகரில் நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க்கனவு – ஜெர்மனியில் வாழும் தமிழர் சந்திப்பு’ நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், “தமிழக வளர்ச்சிக்காக உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சிறிய அளவிலாவது வணிகம் தொடங்கவும். பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்தால், உங்கள் நிறுவனத்தில் தமிழக முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி எடுத்துரைக்கவும். எங்கு வாழ்ந்தாலும் தமிழர் அடையாளத்தை கைவிடாதீர்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது குழந்தைகளுடன் தமிழகம் வருங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.