இபிஎஸ் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்குதல் வழக்கு – அதிமுகவினர் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன்
திருச்சி துறையூரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வண்டி மற்றும் அதன் ஓட்டுநர் தாக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அதிமுகவினர் நால்வருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 24-ம் தேதி மாலை 6.30 மணியளவில், துறையூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் தடுக்கப்பட்டதோடு, அதன் ஓட்டுநரும் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் அதிமுகவினர் 10 பேருக்கு எதிராக துறையூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து, துறையூரைச் சேர்ந்த பாலமுருகவேல் (அமைதி பாலு), விவேக் (விக்கி), தீனதயாளன், கலிங்கமுடையான்பட்டியைச் சேர்ந்த பொன் காமராஜ் ஆகியோர், முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், “எங்களுக்கு சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லை. தவறாக வழக்கில் சிக்கியுள்ளோம். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.
இது தொடர்பான மனு நீதிபதி ஸ்ரீமதி முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில், “எடப்பாடி பழனிசாமியின் பொதுக் கூட்டங்களுக்கு திட்டமிட்டு ஆம்புலன்ஸ்களை அனுப்பி வைத்து இடையூறு செய்கின்றனர்” என வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடிவில், நீதிபதி நால்வருக்கும் இடைக்கால முன்ஜாமீன் வழங்க உத்தரவிட்டதோடு, வழக்கில் துறையூர் காவல் ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்றும், விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.