மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்புரான் மனு

மதுரை ஆதீனத்தின் மீது குற்றவழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும். அத்துடன், தன்னை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்று மதுரை ஆதீன மடத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்புரான் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது:

“நான் மதுரை ஆதீன மடத்தில் தம்புரானாக 2018 ஜூலை மாதம் முதல், குருமகா சந்நிதானத்தின் ஆசீர்வாதத்துடன் பணியாற்றி வருகிறேன். தற்போது 293-வது ஆதீனத்தின் கீழ் தம்புரானாகச் செயல்பட்டு வருகிறேன்.

292-வது குருமகா சந்நிதானத்தின் விருப்பப்படி அடுத்த ஆதீனராக நானே பொறுப்பேற்க வேண்டும். ஆனால், தற்போதைய மதுரை ஆதீனம் அந்த விருப்பத்தைக் கடைப்பிடிக்காமல் வேறு ஒருவருக்குப் பட்டம் அளிக்கத் திட்டமிட்டுள்ளார்.

எனவே, தருமபுரம் ஆதீனத்துடன் ஆலோசித்து, 292-வது குருமகா சந்நிதானத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். மேலும், மதுரை ஆதீனத்தின் மீது குற்றவழக்கு இருப்பதால், அவர் தானாகவே பதவி விலக வேண்டும்.

மதுரை ஆதீன நியமன விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு, 292-வது குருமகா சந்நிதானத்தின் விருப்பப்படி என்னை வாரிசாக அறிவிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, 292-வது மதுரை ஆதீனத்தின் சமாதி முன்பாக அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box