சுங்கச்சாவடி கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் – அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்த சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று முதல், விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் 5% முதல் 7% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன்:

“ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் அதிக விலைக்கு கிடைக்கின்றன. இதற்கிடையே சுங்கக் கட்டண உயர்வு என்பது ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் சுமையாகும். எனவே, மத்திய அரசு இந்த உயர்வை திரும்பப்பெற வேண்டும்.”

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம்:

“சுங்கக் கட்டண உயர்வு விலைவாசி மேலும் உயரும் நிலையை உருவாக்கும். மக்கள் மீதான சுமையை அதிகரிக்கும். இதற்கு முன்பே நாங்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தோம். இப்போது அமலுக்கு வந்திருக்கும் இந்த அதிகப்படியான உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.”

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:

“ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதியுறும் சூழலில், இந்த சுங்கக் கட்டண உயர்வு ஏழை மக்களுக்கு கூடுதல் சுமையாகிறது. ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படும் சுங்கக் கட்டணம், சரக்கு மற்றும் போக்குவரத்து வாகன கட்டணங்களையும், பேருந்து கட்டணங்களையும் உயர்த்தும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இந்த உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.”

வி.கே. சசிகலா:

“சொத்துவரி, மின்கட்டண உயர்வு, ஆவின் பொருட்களின் விலை அதிகரிப்பு, கட்டுமானப் பொருட்கள், விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு என மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுங்கக் கட்டண உயர்வு, மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக இந்த உயர்வை வாபஸ் பெற வேண்டும்.”

Facebook Comments Box