எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலைக்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

எட்டயபுரம் வட்டத்திற்குள் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில், எட்டயபுரம் அருகே இனாம் அருணாச்சலபுரத்தில் இயங்கிய பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தது. இதில் ஆலையின் நிர்வாகியின் உறவினர் கந்தசாமி உயிரிழந்தார். ஏற்கெனவே மானாவாரி விவசாய நிலங்களுக்கு அருகில் பட்டாசு ஆலை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த விபத்தால் அவர்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து, “பட்டாசு ஆலைகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்டு வரும் ஆலைகளின் பணிகள் நிறுத்தப்பட வேண்டும். விவசாயம் செழித்து வரும் இப்பகுதியில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது” என வலியுறுத்தி, இன்று காலை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே மு.கோட்டூர்புரம் விலக்கில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் தலைமை வகித்தார். தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால், அதிமுக ஒன்றிய செயலாளர் தனபதி உள்ளிட்ட பல அரசியல், சமூக அமைப்பினரும், இனாம் அருணாச்சலபுரம், கருப்பூர், தோழ்மாலைப்பட்டி, வீரப்பட்டி, முத்தலாபுரம், சக்கிலிபட்டி, கீழ்நாட்டுக் குறிச்சி, அயன் வடமலாபுரம், கோட்டூர், மேலக்கரந்தை போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், “எட்டயபுரம் வட்டத்தில் மானாவாரி நிலங்களுக்கு அருகே பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசும், அதிகாரிகளும் கண்டிக்கப்பட வேண்டும். வழங்கப்பட்ட அனுமதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்க வேண்டும். மேலும், தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மு.கோட்டூர்புரம் விலக்கில் மேம்பாலம் அமைக்க வேண்டும்” எனக் கோரியபடி போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Facebook Comments Box