மதுரையில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் மேயர், கவுன்சிலர்களை தவிர்த்த அமைச்சர் பிடிஆர் – காரணம் என்ன?

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று மாநகராட்சி அதிகாரிகளுடன் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த சந்திப்பில் மேயர், கவுன்சிலர்கள் வரக்கூடாது என்று கூறியதால், கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அமைச்சர் பிடிஆர் 2016, 2021 தேர்தல்களில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2026-இலும் அதே தொகுதியில் போட்டியிடத் தயாராகிறார். தொகுதி எம்.எல்.ஏ. ஆன பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கை சமர்ப்பித்து, மக்களின் கோரிக்கைகள், குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதுவரை மக்களை சந்திக்கும் போது மேயர், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகளையும் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இப்போது 55-வது வார்டு மக்களை சந்திக்கும் போது மேயர் இந்திராணி, சில கவுன்சிலர்களை தன்னுடன் வர வேண்டாம் என்று கூறியதால் அவர்கள் வரவில்லை. அமைச்சர் உடன் பகுதி செயலாளர், கிளை செயலாளர் மட்டும் சென்றனர்.

இந்த ஆய்வில் மேல மாசி வீதி, விநாயகர் கோவில், நாடார் லேன், மக்கான் தோப்பு தெரு, தலை விரிச்சான் சந்து, மணி அய்யர் தெரு, மணி நகரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். உடனடி தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, மின் வயர்கள் போன்றவை விரைவில் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சாலை வசதிகள், தனியார் பகுதிகளில் மாநகராட்சி மூலம் அடிப்படை வசதி செய்வது குறித்து ஆலோசித்தார். மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சொத்து வரி பிரச்சனை காரணமா?

சொத்து வரி முறைகேடு வழக்கில் மேயர் கணவர் பொன். வசந்த் கைது செய்யப்பட்டதால், அந்த விவகாரத்துடன் தொடர்புடைய கவுன்சிலர்களையும் அமைச்சர் பிடிஆர் அண்மையில் நெருக்கமாகச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அமைச்சரின் ஆதரவாளர்கள் விளக்குகையில்:

“இன்று 55-வது வார்டில் மட்டும் மக்களை சந்தித்தார். வரும் 5-ம் தேதி மற்ற 22 வார்டுகளிலும் மக்களை சந்திக்க உள்ளார். மேயர், கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்களையும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். யாரையும் புறக்கணிக்க வேண்டுமென்று எண்ணம் இல்லை. நிர்வாகிகள் வந்தால் மக்கள் தங்கள் பிரச்சனைகளைத் தாராளமாகச் சொல்ல முடியாது என்பதால் தான் அமைச்சர் இவ்வாறு கேட்டுக் கொண்டார். ஆனால் சிலர் இதை அரசியலாக்குகிறார்கள்” என்றனர்.

Facebook Comments Box