செப்.6 வரை வெப்பம் அதிகரிக்கும் சாத்தியம்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை வெப்பநிலை உயரும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஒடிசா கடற்கரை பகுதிகளை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேற்கு திசை காற்றின் வேக வேறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தின் சில இடங்களிலும், தென்தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேசமயம், பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது.
மேலும், தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 35.6 முதல் 37.4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதனைச் சூழ்ந்த புறநகர் பகுதிகளில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.