“பாஸ்போர்ட் பெற தரகர்களை நாட வேண்டாம்” – மதுரை மண்டல அலுவலர் வசந்தன் அறிவுரை

பாஸ்போர்ட் பெறுவதற்காக பொதுமக்கள் தரகர்களை அணுக வேண்டிய அவசியம் இல்லை; பாஸ்போர்ட் வழங்குவது அலுவலகத்தின் கடமை என்றும், ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீடு தேடி பாஸ்போர்ட் கிடைக்கும் என்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்தார்.

சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு நாட்கள் மொபைல் பாஸ்போர்ட் சேவை முகாம் துவங்கியது. இதில் கலந்து கொண்ட வசந்தன், விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட்டுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“இந்திய வெளியுறவுத் துறை சார்பில் மொபைல் பாஸ்போர்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் கடந்த ஜூன் மாதம் இது தொடங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், முதல் முறையாக சிவகாசியில் இந்த சேவை நடைபெற்று வருகிறது. மக்களிடம் சென்று பாஸ்போர்ட் சேவையை வழங்குவதே அரசின் நோக்கம்.

பாஸ்போர்ட் பெற மக்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டியதில்லை. இந்த முகாமுக்கு சிவகாசியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தேவைப்படின் இத்தகைய முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். தற்போது மதுரை மண்டலத்தின் கீழ் 2 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்களும், 8 அஞ்சலக பாஸ்போர்ட் மையங்களும் செயல்படுகின்றன. ஒரு மக்களவை தொகுதிக்கு குறைந்தபட்சம் ஒரு அலுவலகம் உள்ளது. மேலும், 15 கி.மீ.க்கு ஒருமுறை பாஸ்போர்ட் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் இல்லாத இடங்களில் மொபைல் பாஸ்போர்ட் வாகனங்கள் மூலம் சேவை வழங்கப்படுகிறது.

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் கடந்த ஆண்டு மட்டும் 2.70 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்நாண்டில் 3 லட்சம் பாஸ்போர்ட் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தரகர்களை நம்பாமல், நேரடியாக பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகினால் போதும். பாஸ்போர்ட் பெறுவது எங்கள் கடமை. ஆன்லைனில் விண்ணப்பித்தால், பாஸ்போர்ட் நேரடியாக வீடு தேடி வரும்,” என வசந்தன் தெரிவித்தார்.

Facebook Comments Box