கரூர் வாக்காளர் பட்டியல் விவகாரம்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதா என்பதைக் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கரூர் தொகுதியில் இறந்த வாக்காளர்கள் மற்றும் போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். போலி/இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாவிட்டால், அது தேர்தல் முடிவுகளைப் பாதித்து கள்ள ஓட்டுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடு வீடாகச் சென்று பட்டியலை சரிபார்ப்பது வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் பொறுப்பு என்றாலும், பெரும்பாலான பூத் லெவல் அதிகாரிகள் (BLO) திமுகவினரே நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் குற்றம் சாட்டினார்.
முதன்மை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கரூர் தொகுதி பட்டியலில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்லாது, ஒரே வாக்காளரின் பெயர் மூன்றுமுறை இடம்பெற்றுள்ளதுபோன்ற குற்றச்சாட்டுகளுடன் 2,400 பேரின் பெயர்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பு வாதாடியது.
இதற்கு எதிராக, மனுதாரர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து கள ஆய்வு நடத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதுகுறித்து மனுதாரருக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட நிலை குறித்து தெளிவாக விளக்கும் விரிவான பதில் மனுவை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.