தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களுக்கு புறக்கணிப்பு முடிவு

பெப்சி, கோக் உள்ளிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த உணவு மற்றும் பானப் பொருட்களை புறக்கணிக்க தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது என்று சங்கத் தலைவர் வெங்கடசுப்பு அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதற்குப் பதிலடி நடவடிக்கையாக, தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு மற்றும் பானப் பொருட்களை இனி பயன்படுத்தக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம்.

அதன்படி பெப்சி, கோக், கேஎஃப்சி, அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர் போன்றவற்றைத் தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்குப் பதிலாக இந்திய நிறுவனங்களின் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விரைவில் தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவருக்கும் அமெரிக்க பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரப்பூர்வ உத்தரவு வழங்கப்படும்.

மேலும், ஸ்விகி, சொமோட்டா போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிக கமிஷன் வசூலிப்பதன் மூலம் உணவு விலையை உயர்த்துகின்றன. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே அவற்றையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதற்குப் பதிலாக தமிழகத்தை சேர்ந்த ‘சாரோ’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளோம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். தற்போது ஸ்விகி, சொமோட்டாவில் பணிபுரிபவர்களுக்கு ‘சாரோ’வில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

அமெரிக்கா, இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை அதிக வரி விதித்துள்ளது. இது உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்ட மிக உயர்ந்த வரியாகும். இதன் விளைவாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆயத்த ஆடைகள், இறால், தோல், நவரத்தினங்கள், ஆபரணங்கள், ரசாயனப் பொருட்கள், மின்சார இயந்திரங்கள் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.

Facebook Comments Box