அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் ஒன்றுசேர வேண்டும்: ஓபிஎஸ் ஆதரவு

அதிமுகவில் பிரிந்து சென்றோர் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற மூத்த தலைவர் செங்கோட்டையனின் கருத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

வஉசியின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு, போடி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“அதிமுக உருவாக்கப்பட்ட நாளிலிருந்து கட்சி தொடர்ந்து வளர்ச்சி பெற்று, 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட பிளவுகளே கட்சியை பலவீனப்படுத்தி, தேர்தலில் தோல்வி ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்கள் பல சிரமங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றால், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம்; அவர்களை யாராலும் வெளியேற்ற முடியாது. கழகத்தை ஒன்றிணைப்பதற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.

கட்சி மூத்த முன்னோடி செங்கோட்டையன், எம்ஜிஆர் காலத்திலிருந்தே முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தொண்டர்களை இணைத்து வழிநடத்தி வந்தவர். அவருடைய பங்களிப்பு அளப்பரியது. அவர் கூறியது போல், பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் ஒன்றாக வந்தால் மட்டுமே அதிமுக ஆட்சியை மீண்டும் பெற முடியும். அவரது எண்ணம் நிறைவேற வாழ்த்துகிறேன். அதற்காக நாங்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்” என ஓபிஎஸ் தெரிவித்தார்.

Facebook Comments Box