“செங்கோட்டையன் திமுகவில் சேர்ந்தால் வரவேற்பீர்களா?” – அப்பாவு பதில்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் எப்படிச் செயல்படுவீர்கள் என்ற கேள்விக்கு, தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பதிலளித்துள்ளார்.
திருநெல்வேலியில் வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு கூறியதாவது:
“மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரியால் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. இப்போது சில வரிகளை குறைத்ததாகக் கூறுகிறது. ஆனால் அதனால் மாநில அரசுகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த நன்மையும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் தலா 50 சதவீதம் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்கின்றன. இதை மாற்றி மாநிலங்களுக்கு 75 சதவீதம், மத்திய அரசுக்கு 25 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நீட் தேர்வைப் போன்று ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இது முற்றிலும் தேவையற்றது. அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் இந்தத் தேர்வு கட்டாயம் என்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையாக உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்த வித தகுதி விதிமுறையும் கூறப்படவில்லை. ஏற்கனவே பி.எட் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மீண்டும் தேர்வு வைப்பது சரியானது அல்ல. கல்வி மாநில பட்டியலில் இருந்திருந்தால் இத்தகைய சிக்கல்கள் எழுந்திருக்காது,” என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு, “இது தொடர்பான முடிவை கட்சி தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் எடுக்க வேண்டும்” என்று அப்பாவு தெளிவுபடுத்தினார்.
மேலும், எதிர்க்கட்சிக் கூட்டணி உடைந்துவிட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அது பற்றிய விளக்கம் உடைத்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்கள் அரசோ, கொள்கை நிலைப்பாட்டுடன் செயல்படும் அரசு” என்று குறிப்பிட்டார்.