தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை சாத்தியம்
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (செப்டம்பர் 6) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளையும் ஓரிரு இடங்களில் மழை நீடிக்கும். செப்டம்பர் 8 முதல் 10 வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களுடன் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
- 8ம் தேதி: ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை.
- 9ம் தேதி: கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை.
- 10ம் தேதி: கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டு, இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 8ம் தேதி வரை மணிக்கு 40–50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், சென்னை மேடவாக்கத்தில் 6 செ.மீ., ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 5 செ.மீ., பள்ளிக்கரணை, கண்ணகிநகர், கோவை சோலையாறு தலா 4 செ.மீ., திருவள்ளூர் திரூர், கோவை சின்னக்கல்லார், நீலகிரி அவலாஞ்சி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.