அதிமுகவில் எனக்கு எந்த பொறுப்பும் தரப்படவில்லை: முன்னாள் எம்.பி., நடிகர் ராமராஜன்
முன்னாள் எம்.பி. மற்றும் நடிகர் ராமராஜன், “தற்போது அதிமுகவில் எனக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை. எனவே கட்சி பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்க இயலாது” என்று தெரிவித்துள்ளார்.
ஶ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி தெருவில் நடைபெற்ற நற்பணி மன்ற அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நற்பணி மன்றத்தில் உறுப்பினராக சேர்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது 32 பேர் ரூ.60 ஆயிரம் கட்டி உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். கண் பார்வையற்ற தாமரைக்கனி தலைமையில் மன்றம் சிறப்பாக செயல்படுகிறது.
1967 முதல் எம்.ஜி.ஆர். வழியே தமிழ்நாடு அரசியல் நகர்கிறது. இன்றைய அரசியலில் பல மாற்றங்கள் நடக்கின்றன. கடைசி நாளில் கூட சூழ்நிலை மாறக்கூடும். நான் உயிரோடு இருக்கும் வரை எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா பாதையில் தான் நடப்பேன்.
அதிமுகவில் முன்பு எம்.பி. ஆக இருந்துள்ளேன். ஆனால் இப்போது எனக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. எனவே கட்சி உள்பிரச்சினைகள் குறித்து பேச முடியாது. குடும்பத்தில் சண்டைகள் வருவது போல் அதிமுகவில் உள்ள பிரச்சினைகளும் சாதாரணமே. ஆனால் இறுதியில் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒன்றாகும்.
நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்” என ராமராஜன் தெரிவித்தார்.