நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்ற போது, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி மற்றும் நாய்க்கடிக்கு தேவையான மருந்துகள் கிடைக்கவில்லை. அந்நேரத்தில், இத்தகைய விபத்துகளுக்குப் பலியானவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கே செல்ல வேண்டியிருந்தது.
ஆனால் தற்போது, தமிழகத்தில் உள்ள 2,256 ஆரம்ப சுகாதார மையங்கள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக்கடிக்கு ஏஎஸ்வி மருந்தும், நாய்க்கடிக்கு ஏஆர்வி மருந்தும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாய்களின் எண்ணிக்கையை குறைத்து, அவை ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தடுக்க முதல்வர் தலைமையில் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டமும் நடத்தப்பட்டது. அதன் பின்னர், நாய்களின் பெருக்கத்தைக் குறைக்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.