செப். 15–17: அண்ணா 117-வது பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் – சென்னையில் 15-ம் தேதி இபிஎஸ் உரையாற்றுகிறார்

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் செப்டம்பர் 15 முதல் 17 வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “பேரறிஞர் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, செப்டம்பர் 15 முதல் 17 வரை கட்சி செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களில் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் அதில் கலந்துகொண்டு பேசவிருக்கும் தலைவர்கள் தொடர்பான விவரங்கள் கொண்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 15-ம் தேதி தென் சென்னை மற்றும் வடக்கு (மேற்கு) மாவட்டம் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பழனிசாமி நேரடியாக பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

மேலும், அதிமுக எம்எல்ஏக்கள், சார்பு அணிகள் நிர்வாகிகள், மற்றும் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தங்களது பங்கேற்பை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவதற்காக எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயி மற்றும் மீனவர் பிரிவுகள், மருத்துவ அணி, இலக்கிய அணி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், செப்டம்பர் 15 அன்று அண்ணாவின் உருவச்சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி அவரது பிறந்த நாளை கொண்டாடுமாறு பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

Facebook Comments Box