மதுரை விமான நிலைய பெயர் விவகாரம் – இபிஎஸ் கருத்துக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்ததை, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை விமான நிலையம் அமைந்துள்ள சின்ன உடைப்பு பகுதி முழுவதும் தேவேந்திர குல வேளாளர்கள் வாழ்ந்து வந்த நிலங்களிலேயே இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ராணுவத் தேவைக்காக நிறுவப்பட்ட இது, பின்னர் உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளுக்காக பலமுறை விரிவாக்கப்பட்டது.

இவ்விமான நிலையம் கட்டப்பட்ட போதும், விரிவாக்கப்பட்ட போதும், தேவேந்திர குல வேளாளர்களின் நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கே கைப்பற்றப்பட்டன; பலர் தங்களே தானமாக நிலங்களை அளித்தும் உள்ளனர். சாதாரணமாக இத்தகைய நில அளிப்புகளில், அந்த குடும்பம் அல்லது சமூகத்தின் விருப்பத்திற்கேற்பவே பெயர் சூட்டப்படும் நடைமுறையுள்ளது.

அந்த அடிப்படையில், சுதந்திர இந்தியாவில் தீண்டாமைக்கு எதிராக போராடி, மனித உரிமைக்காக குரல் கொடுத்து, உயிரைத் தியாகம் செய்த தியாகி இமானுவேல் சேகரன் பெயரையே மதுரை விமான நிலையத்துக்கு சூட்டுவது பொருத்தமானது. அவர் சுதந்திரப் போராட்ட வீரரும், ராணுவ வீரரும், குற்றமற்ற சுத்தமான தலைவரும் ஆவார்.

சின்ன உடைப்பு மக்கள் மற்றும் தென் தமிழகம் முழுவதும் வாழும் தேவேந்திர குல வேளாளர்கள் ஒருமித்த மனதுடன் இமானுவேல் சேகரன் பெயரையே கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக புதிய தமிழகம் கட்சி பல போராட்டங்களை நடத்தியதோடு, 2011 முதல் 2016 வரை சட்டமன்றத்திலும் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன், விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் கூட இதைப் பற்றி எதுவும் கூறவில்லை.

எடப்பாடியின் இந்த கருத்து தேவையற்றது; தேர்தல் நேரத்தில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சரி செய்யாமல், வேறு விஷயங்களில் ஈடுபடுவது, அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பெரிய அபாயம் ஏற்படுத்தக்கூடும்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box