“பழனிசாமி இன்று நீதிமான் போல நடித்து வருகிறார்!” – கருணாஸ் விமர்சனம்
“எக்கு கோட்டையாக இருந்த அதிமுகவை, பலவீனமான கோட்டையாக மாற்றியவர் பழனிசாமிதான். அனைத்து தவறுகளையும் செய்து முடித்துவிட்டு, உத்தமர் வேஷம் போடுகிறார்” என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் மற்றும் நடிகர் கருணாஸ் குற்றஞ்சாட்டினார்.
சிவகங்கையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
“பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் கேட்டபோது ஏற்காதவர். ஆனால் இப்போது போலி நாடகம் ஆடுகிறார். நயினார் நாகேந்திரன் எந்த புனிதரும் அல்ல. அவரும் அரசியல் சதுப்பில் ஊறியவர். முக்குலத்தோர் வாக்குகளைப் பெறவே பாஜக அவரை தலைவராக்கியது.
செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியதை நான் கண்டிக்கிறேன். அந்த நீக்கத்தால் கொங்கு மண்டல மக்களிடையே கோபம் அதிகரித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பழனிசாமி வெற்றி பெறுவது கடினம். தேர்தலில் அரசியல் லாபத்திற்காக பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. தமிழர்களுக்கு எதிரான பாஜகவின் போக்கையும், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் அடிப்படையில் நடக்கும் அரசியல் சூதாட்டத்தையும் புத்தகமாக எழுதுகிறேன். அதை முதல்வர் மூலம் வெளியிடப் போகிறேன்.
அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா எக்கு கோட்டையாக உருவாக்கினர். ஆனால் தனது சுற்றுப் பயணத்திலேயே பழனிசாமி அதை பலவீனமாக்கி வருகிறார். கூவத்தூரில் அவர் எப்படி முதல்வராக்கப்பட்டார் என்ற உண்மையை வெளிப்படுத்துவது அரசியல் நாகரிகம் அல்ல. தேவைப்பட்டால் ஆதாரங்களோடு வெளிப்படுத்துவேன். நம்பிக்கை துரோகம் செய்த பழனிசாமி அதற்கான தண்டனையை அனுபவிப்பார்.
அதிமுகவை வெளியிலிருந்து யாரும் சிதைக்க வேண்டியதில்லை. அதைக் கலைக்கப் போவது பழனிசாமியே. அதிமுகவை ஒன்று சேர்த்தாலும் நான் ஆதரவு தர மாட்டேன். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ். சசிகலா சிறைக்கு சென்றது யாரால் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
அனைத்து தவறுகளையும் செய்து முடித்துவிட்டு, இப்போது பழனிசாமி உத்தமர் போல் வேஷம் போடுகிறார். அவர் தமிழக மக்களுக்கு உண்மையிலேயே நேர்மையானவராக இருப்பாரா? குற்றமற்ற அரசியல்வாதிகள் எவரும் இல்லை. மக்கள்தான் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மீண்டும் திமுக ஆட்சி வரும். அப்போது பழனிசாமி தலைமையிலான அதிமுக எங்கே இருக்கும் என்பதே கேள்வி” எனக் கருணாஸ் தெரிவித்தார்.