“செங்கோட்டையனின் முயற்சிகள் பலன் பெறட்டும்” – ஓ.பன்னீர்செல்வம்

“கடந்த மூன்றரை ஆண்டுகளாக, கட்சி ஒன்று சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்நிலையில் அதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ள செங்கோட்டையனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைக்க, 10 நாளுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை நீக்கினார். இதற்கிடையில், டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “செங்கோட்டையனின் எண்ணமும், செயல்பாடும் வெற்றியடையட்டும் என வாழ்த்துகிறேன். தம்பிதுரை கருத்துக்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. கட்சி ஒன்று சேர்ந்தால்தான் முன்னேற்றம் சாத்தியம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

மேலும், குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கும் சி.பி. ராதாகிருஷ்ணனைப் பற்றி அவர் கூறுகையில், “அவர் மிகவும் மதிப்புக்குரியவர், அன்பானவரும் பண்பானவரும் ஆவார். நானும் அவரும் நல்ல புரிதலுடன் பழகுகிறோம். அவருடைய பெயர் அறிவிக்கப்பட்ட உடனே நான் வாழ்த்து தெரிவித்துவிட்டேன். நயினார் நாகேந்திரனிடம் என் கைபேசி எண் உள்ளது, அவர் என்னை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்தார்.

Facebook Comments Box