நெல் கொள்முதல் நிலைய ஊழல் – திமுக அரசை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்: அன்புமணி
“வறுமையில் தவிக்கும் விவசாயிகளிடம் கட்டாயமாக கையூட்டு கேட்பது மிகப் பெரிய குற்றமும், பாவமும் ஆகும். இதை தடுத்து நிறுத்தாமல், மாறாக ஊக்குவித்து வரும் திராவிட மாடல் அரசை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில் இந்த ஆண்டு குறுவை பருவ நெல் அறுவடை முன்கூட்டியே துவங்கியதால், வழக்கம்போல அக்டோபர் 1ம் தேதி அல்லாமல், செப்டம்பர் மாதத்திலேயே அரசு நெல் கொள்முதல் ஆரம்பித்துள்ளது. ஆனால், கொள்முதல் நிலையங்களில் ஊழல் அலை வீசுவதால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
2024-ஆம் ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.2405 (சாதாரண நெல்), ரூ.2450 (சன்ன நெல்) கொள்முதல் விலை வழங்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு ரூ.95 அதிகரித்து முறையே ரூ.2500 மற்றும் ரூ.2545 வழங்கப்படுகிறது. ஆனால் அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடையவில்லை. காரணம், நேரடி கொள்முதல் மையங்களில் பணியாளர்கள் ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் ரூ.60 கையூட்டு பறிப்பதுடன், 2 கிலோ நெல்லையும் குறைத்துக் கணக்கிடுகிறார்கள். இதனால், ஒரு குவிண்டாலுக்கு ரூ.150 கையூட்டும், ரூ.125 மதிப்புள்ள 5 கிலோ நெல்லும் விவசாயிகள் இழக்கிறார்கள்.
மத்திய அரசு சாதாரண நெலுக்கு ரூ.2369 கொள்முதல் விலை நிர்ணயித்துள்ளது. தமிழக அரசு அதற்கு கூடுதலாக ரூ.131 ஊக்கத்தொகை தருகிறது. ஆனால் அதிகாரிகள், ஒவ்வொரு குவிண்டாலுக்கும் ரூ.275 வரை கையூட்டாக வசூலிக்கின்றனர் என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது ஊக்கத்தொகையை விட இரு மடங்கு அதிகம்.
இதனால் விவசாயிகள், அரசிடம் நெல்லை விற்க முடியாமல், தனியார் வியாபாரிகளிடம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தனியார் வியாபாரிகள் ரூ.2300க்கு மட்டுமே கொள்முதல் செய்தாலும், கட்டாய கையூட்டைக் கழித்துப் பார்த்தால், அவர்களிடம் விற்கும் நிலை தான் நன்மை தருகிறது.
ஒரு குவிண்டால் நெல் உற்பத்திக்கு ரூ.2300 செலவாகும். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி 50% லாபத்துடன் ரூ.3450 தரப்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு தற்போது ரூ.2500 மட்டுமே வழங்குகிறது. ஒடிசா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் ரூ.800 ஊக்கத்தொகை தரும் நிலையில், தமிழக அரசு வெறும் ரூ.131 மட்டுமே வழங்கி, அதையும் விட அதிக தொகையை கையூட்டாக பறிப்பது முற்றிலும் ஏற்க முடியாதது.
நெல் கொள்முதல் நிலைய ஊழல் குறித்து நான் பலமுறை எச்சரித்தும், சென்னை உயர்நீதிமன்றமும் கண்டித்தும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கையூட்டு தொகை அதிகாரிகள் வரை பகிரப்படும் நிலை உள்ளது என்று கூறப்படுகிறது.
விவசாயிகளிடம் இப்படிப்பட்ட சுரண்டல் நடைபெற, அதை நிறுத்தாமல் இருக்கும் திமுக அரசு, விவசாயிகளின் கோபத்திலிருந்து தப்ப முடியாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.