‘முதலில் அவர் வெளியில் வரட்டும்’ – விஜய் பிரசாரம் குறித்த துரைமுருகன் பதில்
தவெகா தலைவர் விஜயின் பிரசாரத்தைப் பற்றி கேட்கப்பட்டபோது,
“விஜய் முதலில் வெளியில் வரட்டும்; பிறகு பார்ப்போம். அவர் பிரசாரத்தை சனிக்கிழமையா வைக்கிறார், வெள்ளிக்கிழமையா வைக்கிறார் என்பது எங்களுக்கு முக்கியமில்லை” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருப்புமேடு சாலையில் உள்ள மண்டபத்தில், இன்று (செப்டம்பர் 10) நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு, மனு அளித்த பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி, வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ப. கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணைமேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் மேலும் கூறியதாவது:
- “காவிரியில் தற்போது அதிக அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறப்போம் என்று கர்நாடகா துணைமுதல்வர் சிவக்குமார் கூறியிருக்கிறார். அதில் புதிதாக எதுவும் இல்லை.
- சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தமிழர் மட்டுமல்ல, என் நீண்ட நாள் நண்பரும் ஆவார். அவருக்கு எனது வாழ்த்துகள். அவர் எப்படி செயல்படுகிறார் என்பதன் அடிப்படையில் தான் அவரது பணியை மதிப்பிட முடியும்.
- தமிழக நலனுக்காக அவர் செயல்படுவாரா என்று கேட்கிறீர்கள். ஆனால், மேல்சபை தலைவராக அவர் செய்யக்கூடியது கேள்வி கேட்பதே தவிர, நேரடி பலன் எதுவும் இல்லை.
- அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து கருத்து சொல்ல தேவையில்லை. அது அந்தக் கட்சியின் உள் பிரச்சினை. டி.மு.க. காரணம் என்றும் பலர் கூறியுள்ளனர். ஆனால் அவற்றை எல்லாம் புறக்கணிக்க வேண்டும்.
- தாமிரபரணி ஆற்றை டி.மு.க. முழுகி விட்டதாக நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது, அவர் புதிய பதவிக்கு வந்திருப்பதால் உண்டான உற்சாகம். அவர் சட்டப்பேரவையில் எப்படி செயல்படுகிறார் என்பது டி.மு.க. வுக்குத் தெரியும்.”
அதனைத் தொடர்ந்து, விஜய் பிரசாரம் குறித்து மீண்டும் கேட்கப்பட்டபோது,
“விஜய் சனிக்கிழமையா, வெள்ளிக்கிழமையா பிரசாரம் செய்கிறார் என்பது முக்கியமில்லை; முதலில் அவர் வெளிவரட்டும், பிறகு பார்க்கலாம்” என துரைமுருகன் கூறினார்.