யாழ்ப்பாண பருத்தித்துறை துறைமுக மேம்பாட்டுக்கு இந்தியா உதவியுடன் இலங்கை ஒப்புதல்
யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை இந்திய அரசின் ஆதரவுடன் மேம்படுத்த இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. பருத்தித்துறை துறைமுகம், இலங்கையின் பல பகுதிகளை இணைக்கும் முக்கிய மையமாகவும், இந்தியாவுக்கு மிக அருகில் (ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில்) அமைந்துள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது விடுதலைப் புலிகளின் கடற்படை நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் நடந்த ராணுவத் தாக்குதல்களில் இந்த துறைமுகம் சேதமடைந்தது. பின்னர், 1995-ல் இலங்கை ராணுவம் இதை கைப்பற்றியது. 2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியிலும் கடும் சேதம் ஏற்பட்டது. தற்போது 7 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த துறைமுகத்தில் சுமார் 300 படகுகள் வரை நிறுத்தும் வசதி உள்ளது. மேம்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக, மீன் பதனிடும் அறை, விற்பனை நிலையம், எரிபொருள் நிரப்பும் நிலையம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
இந்த துறைமுகம் இந்தியாவுக்கு மிக அருகில் இருப்பதால் சீன அரசும் இதை மேம்படுத்த ஆர்வம் காட்டியது. எனினும், இலங்கை அமைச்சரவை இந்திய அரசின் உதவியுடன் மேம்படுத்த தீர்மானித்துள்ளது. இதற்காக இந்திய மீன்பிடித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய கடலோரப் பொறியியல் நிறுவனம் சார்பில் நிபுணர் குழுவினர் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
அங்கு வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், துறைமுக மேம்பாட்டு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்திய துணைத் தூதர் சாய் முரளியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்திய உதவிக்காக நன்றி தெரிவித்த ஆளுநர் வேதநாயகன், இது மீன்வள வளர்ச்சிக்கு பெரும் பலனளிக்கும் எனக் கூறினார்.