நாமக்கல் சிறுநீரக திருட்டு விவகாரத்தால் உறுப்பு மாற்று சிகிச்சை அனுமதியில் தாமதம் – உயர் நீதிமன்றத்தில் தகவல்
நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தின் தாக்கம் காரணமாக, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், “எனது சிறுநீரகங்கள் செயலிழந்ததால், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்தேன். ஆனால், இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால் என் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. எனவே விரைவில் அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. மனுதாரரின் தரப்பில் வழக்கறிஞர், “கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் சிறுநீரக திருட்டு விவகாரம் பெரிதாகிப் போயுள்ளது. அதன் காரணமாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஒப்புதல் தாமதமாகியுள்ளது. முன்பு இதேபோன்ற வழக்கில், 4 வாரங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், மனுதாரருக்கும் விரைந்து சிகிச்சை அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.
நீதிபதி தனது உத்தரவில், “மனுதாரரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளன. தாயாரிடம் இருந்து தானம் பெற்ற சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது. தற்போது அவர் டயாலிசிஸ் மூலம் உயிர் தக்க வைத்திருக்கிறார். தற்போது மனுதாரரின் நண்பி ஒருவர் சிறுநீரக தானம் வழங்க முன்வந்துள்ளார். எனவே, மனுதாரரின் ஆவணங்களை 8 வாரங்களுக்குள் பரிசீலித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள குழு உரிய முடிவை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.