மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது – 11,275 கனஅடி பதிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, விநாடிக்கு 11,275 கனஅடியாக சரிந்தது. நேற்று காலை 15,800 கனஅடியாக இருந்த வரத்து, மாலை நிலவரப்படி 11,275 கனஅடியாக குறைந்தது.

அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு விடப்படும் நீரும் காலை 16,000 கனஅடியில் இருந்து மாலை 15,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அதில் நீர்மின் நிலையங்கள் வழியாக 13,000 கனஅடி, 16 கண்மதகுகள் வழியாக 2,000 கனஅடி வெளியேற்றப்பட்டன.

இந்நிலையில், நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு நேற்று மாலை சரிசெய்யப்பட்டதால், 16 கண்மதகுகள் வழியாக விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. பின்னர், முழுமையாக நீர்மின் நிலையம் வழியாக 15,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அதேசமயம், கால்வாய் பாசனத்திற்கு 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால், 8 நாட்களுக்கு பிறகு அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சரிந்தது. தற்போது நீர்மட்டம் 119.89 அடி, நீர் சேமிப்பு 93.29 டிஎம்சி என பதிவாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில், நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18,000 கனஅடி இருந்த காவிரி நீர்வரத்து, நேற்று காலை 6 மணிக்கு 14,000 கனஅடியாகக் குறைந்தது. பின்னர் காலை 10 மணிக்கு 12,000 கனஅடியாக மேலும் சரிந்தது. மாலை வரை அதே நிலை நீடித்தது.

Facebook Comments Box